அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு தொழில்வாய்ப்பு: தடைகளும் தீர்வுகளும்

அரச ஊழியர்களுக்கு வௌிநாட்டு தொழில்வாய்ப்பு: தடைகளும் தீர்வுகளும்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக வெளிநாட்டுக்கு தொழில் வாய்ப்புக்கு செல்வோரின் எண்ணிக்கை தற்போது வெகுவாக அதிகரித்து இருக்கின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் அரச உத்தியோகத்தர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வது தொடர்பான தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொண்டு இருக்கின்றது. இதற்கமைய நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் விசேட தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானம் 

கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்தபட்சம் 05 வருடங்கள் சம்பளமற்ற விடுறையைப் பெற்றுக் கொள்வதற்கு தற்போது ஏற்பாடுகளின் பிரகாரம் இயலுமை உள்ளது. ஆனாலும், குறித்த காலப்பகுதியில் ஓய்வூதியக் கணிப்பைக் கருத்தில் கொள்ளாமை, சிரேட்டத்துவத்தைப் பாதிக்கின்றமை மற்றும் ஏனைய நிபந்தனைகளால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறையைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுதிவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அவர்களின் சிரேட்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளியிடுவதற்காக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

இதன்படி, அரச உத்தியோகத்தர்கள் தமது பதவிக்காலத்தில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வெளிநாட்டு நிறுவனமொன்றில் பணிபுரியும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

ஏற்கனவே வெளிநாடு சென்றுள்ள ஒருவர் ஊதியம் இல்லாத விடுமுறையை பெற விரும்பினால்

இந்த விடயம் தொடர்பில், முன்னதாக ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் தினேஸ் குணவர்தன, இதனால் அதிகாரியின் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாது என தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே ஊதியத்துடன் அல்லது ஊதியம் இல்லாமல் வெளிநாடு சென்றுள்ள ஒருவர் ஊதியம் இல்லாத விடுமுறையை பெற விரும்பினால் நாடு திரும்பாமல் தேவையான அனுமதியைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடைமுறையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இந்த திட்டத்தின் வாயிலாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிகளவு பங்களிப்பை வழங்க முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதனை குறைக்கவும் அந்நியச் செலாவணியை அதிகரிக்கவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கிறது.

வௌிநாட்டு ​வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்யும் முறை

வௌிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தாமாக முன்வந்து இலங்கை வௌிநாட்டு ​வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வௌிநாடு செல்ல விரும்பும் அரச உத்தியோகத்தர்கள் தமது விபரங்களை வௌிநாடு வேலைவாய்ப்புப் பணியக உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரச உத்தியோகத்தர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலையீட்டுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டுக்கு அந்நிய செலாவணியை விரைவில் கொண்டு வரும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைகளைப் பெற ஆர்வமுள்ள அரச அதிகாரிகள் SLBFE உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக தமது விபரங்களை உள்ளிட முடியும் என அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளரின் விளக்கம்

அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கான நடைமுறை தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், மேலதிக பொது முகாமையாளர் மங்கல ரந்தெனிய விளக்கமளித்துள்ளார்.

கடந்த தினங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்பு அமைய அரச ஊழியர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாகவும், அதில் அவர்களுக்கு அது தொடர்பில் விசேட சந்தர்ப்பம் இருப்பதாகவும் கூறப்பட்ட விடயம் தொடர்பில் பெருமளவான அரச ஊழியர்கள் எமது பணியகத்தைத் தொடர்பு கொண்டு வினவுகின்றனர்.

நாங்கள் பணியகம் என்ற அடிப்படையில் மிகவும் சரியான காரணத்தை விடயத்தை உங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டும்.

தற்போது இலங்கை அரசாங்கத்தில் அரச கட்டமைப்பில் கட்டமைப்பில் சேவையாற்றி கொண்டிருக்கும் எந்த ஒரு அரசு உத்தியோகத்தரும் அரசாங்கத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி இருந்தால் சம்பளமற்ற விடுமுறை பெற்றுக்கொண்டு ஆங்கிலத்தில் சொல்வதானால் No Pay சம்பளமற்ற விடுமுறையைப் பெற்றுக்கொண்டு இரண்டு வருடங்களுக்கோ அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த காலப்பகுதிக்குள் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடியும்.

எனினும் வெளிநாட்டிற்குச் சென்று வேலை செய்துவிட்டு மீண்டும் இலங்கைக்கு வந்தால், தாங்கள் பணியாற்றிய காலத்தில் தங்களது  பதவிநிலையில் சிரேஷ்டத்துவம் இல்லாமல் போய்விடும் என்ற காரணத்தினால் பெருமளவானோர் வௌிநாட்டு தொழிலுக்கு செல்வதில்லை. அதனால்தான் அந்த சிரேஷ்டத்துவத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த சந்தர்ப்பத்தை வழங்க அரசாங்கம் யோசனை ஒன்றை முன்வைத்து இருக்கின்றது.

எனினும், இந்த திருத்தப்பட்ட முறைமைக்கு அமைய இன்னும் இது தொடர்பில் அரச சேவைகள் அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படவில்லை.  எனவே. நாங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் என்ற அடிப்படையில் உங்களுக்கு வழங்கும் ஆலோசனையானது, தற்போது சம்பளமற்ற விடுமுறை பெற்றுக்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லமுடியும். எனினும்  எதிர்காலத்தில் திருத்தப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய சம்பளமற்ற விடுமுறையை வழங்கி, நீங்கள் பணியாற்றிய காலத்திற்கு அமைய, உரித்தான சிரேஷ்டத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். - என்றார்.

இந்த நிலையில், அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய> அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுதிவாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காக அவர்களின் சிரேட்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கை ஆலோசனைகளை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வௌியிடவேண்டியுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image