​திட்டமிட்ட இழுத்தடிப்பில் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்!

​திட்டமிட்ட இழுத்தடிப்பில் தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரத்தில் இம்முறையும் திட்டமிட்ட அடிப்படையில் இழுத்தடிப்பு தொடர்கின்றது. அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க முடியாது என தோட்டக் கம்பனிகள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டன.

அரசியல் மற்றும் தொழிற்சங்க பலத்தை பயன்படுத்தி ஆயிரம் ரூபா என்ற இலக்கை அடைவதற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டாலும், கம்பனிகளின் உடும்புப்பிடியை அவற்றால் தகர்க்க முடியவில்லை.

அதேபோல பெருந்தோட்டங்களின் காணி உரிமை தம்வசம் இருந்தும், அவற்றை குத்தகைக்கு எடுத்துள்ள தனியார் கம்பனிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழக்க நேரிடும் என்பதால் ‘தந்திரோபாய பின்வாங்கலில்’ ஈடுபட தொழிற்சங்கங்கள் உத்தேசித்துள்ளன. இதற்கான ஆரம்பமாகவே ‘ஆயிரம் இல்லையேல் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவோம்’ – என்ற அறிவிப்பு தொழிற்சங்கங்கள் தரப்பில் இருந்து விடுக்கப்பட்டுள்ளன.

காலத்தை கடத்தும் வகையில் சம்பள உயர்வு பேச்சும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ‘தை பிறந்தநால் வழி பிறக்கும்’ என்பது தமிழர்களின் நம்பிக்கை. ஆனால் பிறக்கவுள்ள தையிலும் தொழிலாளர்கள் ‘வலி’களை சுமந்துகொண்டே வாழவேண்டிய அவலநிலை தொடர்கின்றது.

கூட்டு ஒப்பந்தம் என்றால் என்ன?

வெள்ளையர்களிடமிருந்து 1972 இல் தேசியமயப்படுத்தப்பட்ட பெருந்தோட்டங்கள் 1990 காலப்பகுதியில் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டன. அதன்பின்னரே 1992 முதல் கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

அரச – தனியார் துறையினருக்கான சம்பளமானது சம்பள நிர்ணயச்சபையினூடாகவே நிர்ணயிக்கப்பட்டாலும் -மலையகத் தொழிலாளர்கள் விவகாரத்தில் மேற்படி சபை தலையிடாது. கூட்டு ஒப்பந்தம் ஊடாகவே சம்பளம் நிர்ணயிக்கப்படும்.

இதன்படி பெருந்தோட்டக் கம்பனிகளும், தொழிற்சங்கங்களும் பேச்சு நடத்தி பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பளத்தை தீர்மானிக்கும் முறைமையே கூட்டுஒப்பந்தம் எனப்படுகின்றது.

பொருளாதாரம் – வாழ்க்கைச்செலவு ஆகியவற்றுக்கேற்ப சம்பளம் வழங்கப்படவேண்டும் என்பதாலேயே இரண்டு வருடங்களுக்கு ஒருதடவை இவ்வொப்பந்தம் புதுப்பிக்கப்படுகின்றது.

கூட்டு ஒப்பந்தத்தில் சம்பளம் மட்டுமல்ல தொழிலாளர்களின் நலன்சார் விடயங்களும் தீர்மானிக்கப்படுகின்றன. இருந்தும் அந்த சரத்துகளை தோட்டக்கம்பனிகள் கடந்த காலங்களில் பின்பற்றவில்லை. இதனால், ஒப்பந்தத்தின் முழுமையான நன்மையை தொழிலாளர்களால் நுகரமுடியாமலுள்ளமை வேதனைக்குரிய விடயமாகும்.

இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசியத் தோட்டத்தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியன தொழிலாளர்கள் சார்பிலும் சுமார் 23 கம்பனிகள் நிர்வாகத்தின் சார்பிலும் பேச்சுகளில் பங்கேற்கும். இதில் இரு அரச நிறுவனங்களும் உள்ளடங்குகின்றன.

2013 முதல் 2019வரை ‘சம்பள உயர்வு’ பேச்சு

கடந்துவந்த பாதை.......

ஆரம்பகாலகட்டத்தில் பெருந்தோட்டத்துறையில் தொழில் புரியும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான முறையிலேயே சம்பளம் வழங்கப்பட்டது. காலப்போக்கிலேயே இரு பாலாருக்கும் ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் 2015 மார்ச் 31 ஆம் திகதியுடன் காலாவதியானது. ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்குரிய பேச்சுகள் முன்கூட்டியே ஆரம்பமாகியிருந்தாலும், பொதுத்தேர்தல் நெருங்கியதால், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் ஆயிரம் ரூபா சம்பளம் அவசியமென்ற கோரிக்கை தேர்தல் குண்டாக வீசப்பட்டது.

அதன்பின்னர் ஏனைய தொழிற்சங்கங்களும் ஆயிரம் ரூபாவுக்காக குரல் கொடுத்தன. எனினும், கம்பனிகள் இணங்கவில்லை. அப்போதும் ஆயிரம் ரூபா வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சம்பள உயர்வை வலியுறுத்திலும் மலையகத்தில் எட்டுத்திக்கலும் வெடித்த தொழிற்சங்க போராட்டங்களுக்கு வடக்கிலும், கிழக்கிலும், தலைநகரிலும் ஏன்! புலம்பெயர் நாடுகளில் வாழும் பாட்டாளி வர்க்கத்தினர் நேசக்கரம் நீட்டினர்.

இவ்வாறு 18 மாதங்களாக போராட்டங்கள் தொடர்ந்ததால் தொழிலாளர்களின் பொருளாதாரமும் ஆட்டம்காண தொடங்கியது. ஆரம்பத்தில் தொடர், அதன்பின்னர் சுழற்றி முறையென போராட்டவடிவங்கள் உருமாறியதாலும், தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்திலும் இறுதியில் ஏனோதானோவென ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

2013 காலப்பகுதியில் பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு, அடிப்படை நாட்சம்பளமாக 500 ரூபாவும், வரவு ஊக்குவிப்பு கொடுப்பனவாக 60 ரூபாவும், நிலையான கொடுப்பனவாக 30 ரூபாவும் ,உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு கொடுப்பனவாக 140 ரூபாவுமாக நாளொன்றுக்கு 730 ரூபா வழங்கப்பட்டது.

எனினும், 2019 இல் புதிதாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 500 ரூபாவிலிருந்து 700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது. விலைக்கேற்ற கொடுப்பனவாக 50 ரூபா வழங்கப்பட்டது. விலைக்கொடுப்பனவு, வரவுக்கான கொடுப்பனவு என்பன நீக்கப்பட்டன. இதன்படி நாளொன்றுக்கான சம்பளமாக 750 ரூபாவை தொழிலாளர்கள் பெற்றனர். கூட்டிக்கழித்து பார்த்தால் ஆயிரம் ரூபாவை எதிர்ப்பார்த்த தொழிலாளர்களுக்கு வெறும் 20 ரூபாவே சம்பள உயர்வாக கிடைத்தது என்பது கசப்பான உண்மையாகும்.

தற்போது அடிப்படை நாட் சம்பளமாக 700 ரூபாவை பெறும் தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தத்தின் ஊடாக மேலும் 300 ரூபா அதிகரிக்கப்பட்டு ஆயிரம் ரூபாவை அடிப்படை நாட் சம்பளமாக எதிர்ப்பார்க்கின்றனர். இதற்காக 5 வருடங்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கோரிக்கையும் இதுவாகவே இருக்கின்றது.

இந்நிலையில் ‘அடிப்படை’ என்ற பதத்தை நீக்கிவிட்டு, தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளம் (அனைத்து கொடுப்பனவுகளையும் உள்ளடக்கி) 2020 மார்ச் முதல் ஆயிரம் ரூபாவாக இருக்கவேண்டும் என 2020 ஜனவரியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்திருந்தார். ஜனாதிபதியின் அறிவிப்பைக்கூட கம்பனிகள் ஏற்கவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திலும் ஆயிரம் ரூபா தொடர்பான யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. இதனை வழங்க மறுக்கும் கம்பனிகளின் முகாமைத்துவம் மறுசீரமைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கும் கம்பனிகள் பணிவதாக தெரியவில்லை. தம்மால் முன்வைக்கப்படும் தீர்வு திட்டமே நடைமுறைக்கு வரவேண்டும் என்பதில் முதலாளிமார் சம்மேளனத்தினர் உறுதியாக நிற்கின்றனர். அதாவது அடிப்படை நாட் சம்பளத்தை 50ரூபாவால் மட்டும் உயர்த்துவதே சம்பனிகளின் நோக்கம் என மலையக சிவில் அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.

- ஆர்.சனத்/வேலைத்தளம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image