இலங்கை அரசாங்கம், சமீபத்தில் தனது அபிவிருத்தி மூலோபாயமான தூரநோக்கு 2025| ஐ வெளியிட்டது. 2020 ஆம் ஆண்டளவில் 1 மில்லியன் வேலைகளை உருவாக்குதல் என்பது அரசாங்கத்தின் முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.
இந்த இலக்கை அடைவதானது, விரும்பத்தக்க ஓர் அளவுக்கு பொருளாதாரத்தின் முறைசாராத் துறைகளை முறைசார்ந்ததாக்குவது திறன்களுடனான பெண்கள், இளைஞர், மாற்றுத்திறன் கொண்டோர் ஆகியோரைக் கொண்ட தொழிற்படையை உருவாக்கி தொழிற்சந்தைக்குத்தேவைப்படுவோரை சான்றுப்படுத்துவது; நுண், சிறு, மத்திய தர முயற்சியாண்மைகளது உற்பத்தித்திறனையும், போட்டித் தன்மையையும், சூழலை எதிர்கொள்ளும் தன்மையையும், அனர்த்தங்களிலிருந்து மீளுருவாகும் தன்மையையும் மேம்படுத்துவது ஆகியவற்றின் மீதான நடவடிக்கைகளைக் கோரி நிற்கின்றன.
மேலும், நிலைபேறான, உள்ளார்ந்த, கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மீதான, DWCP (2018-2022)இல் கூறப்பட்டுள்ள மூலோபாயங்கள் முக்கிய அரசாங்க கொள்கைக் கட்டமைப்பிலும், தேசிய மனிதவள மற்றும் வேலைவாய்ப்புக் கொள்கையிலும் (NHREP) உள்ளடக்கப்பட்டுள்ள கோட்பாடுகளில் பிரதிபலிக்கின்றன. இலங்கை GSP+ ஏற்றுமதிச் சலுகை பெறும் பயனாளியாக தகுதியை பெற்றமையால், அரசாங்கம், தொழிலாளர், தொழில்கொள்வோர் ஆகியோர், மனிதவளத்தில் முதலீடு செய்வதற்கு கூடுதல் ஊக்குவிப்புகிடைத்துள்ளது. எனவே, ஓர் உயர் திறமையான, உலக ரீதியாகப் போட்டியிடக்கூடிய, பல்வேறு திறன்களுடனான, உற்பத்தித்திறன் கொண்ட தொழிற்படையொன்றை, தொழிற் சந்தைக்குத் தேவையான சந்தைப்படுத்தற் கல்வி மற்றும் திறன்கள், மாற்றமடைகின்ற தொழில் வடிவங்கள் (அதாவது, வேலையின் எதிர்கால வடிவம்) ஆகியவற்றினூடாக உருவாக்கும் முயற்சிக்காக, நாட்டின் இந்த முன்னுரிமையானது அமைக்கப்பட்டுள்ளது.
நிலைபேறானதும் கண்ணியமானதுமான வேலைவாய்ப்பை உருவாக்குதலானது கண்ணியமான வேலைக்கான நிகழ்ச்சிநிரலிலும், SDG இலக்கு 8 இலும் தங்கியுள்ளது. இலங்கையில் ILO ஆனது, முரண்பாடுகளுக்குப் பிந்திய சந்தர்ப்பம் போன்ற சிரமமான சூழ்நிலைகளில் மிகவும் ஒதுக்கப்பட்டோருக்கு (பெண்களும் இளைஞரும் மாற்றுத்திறனுடைய ஆட்களும்), கிராமியப் பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் முக்கியமான தொழில்நுட்ப ஆற்றலைக் கொண்டுள்ளது. DWCP (2018-2022) ஆனது, ILO வின் மூலாதார விடயமான நிலைபேறானதும் கண்ணியமானதுமான தொழில்வாய்ப்பை ஊக்குவித்தல் என்பதுடன் இணைந்துள்ளது.
பெண்கள், இளைஞர் மற்றும் மாற்றுத் திறனுடையோர் தொழிற் சந்தையில் பிரவேசிப்பதற்கு உகந்த சூழல் உருவாக்கமும் தடைகளைக் குறைத்தலும்
தொழிற்படையில் பெண்களின் பங்கேற்பு பற்றிய 2016இல் ஒரு ILO ஆய்வு, பால்ரீதியான சமுதாய விதிகள் மற்றும் பாகுபாடு ஆகியவற்றை, பாரபட்சமான தொழிற்படைப் பங்கேற்புக்கான அடிப்படைக் காரணங்களாக அடையாளங்கண்டது. இந்த ஆய்வு மேலும், பணிகள் மற்றும் திறன்களை அடிப்படையாகக்கொண்டு சம்பளங்கள் சம்பளச்சபைகளால் தீர்மானிக்கப்பட்டாலும், உண்மையான சம்பளங்களில் பால் ரீதியான வேறுபாடு பின்பற்றப்படுவது பற்றிக் குறிப்பிடுகிறது.
மேலும், பெண்கள் சிரேஷ்ட அல்லது முகாமைத்துவ வகிபாகங்களில் இருப்பது குறைவாகவுள்ளது என்பதுடன், இது அவர்களது தொழில் முன்னேற்றத்தில் காணப்படும் மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களைக் குறிக்கிறது. வேறு பல நாடுகளிலும் இருப்பது போன்று, இலங்கையிலும் பெண் ஊழியர்களது பங்கேற்பின் போக்கானது, M-வளையி| போன்று காணப்படுகிறது. இதில், பெண்களது தொழில்-வாழ்க்கை அவர்களது பிள்ளைப்பேற்றுக் காலத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தடைப்படுகிறது. வேலைத்தலங்களில் பால்நிலைச் சமத்துவத்தை உறுதிப்படுத்துவத்றகாக, பிள்ளைகளது கவனிப்புத் தேவைகளின் அவசியத்தன்மை மற்றும் நெகிழ்ச்சியான வேலை நிலைமைகள் (உ-ம்: பகுதிநேரம், வீட்டிலிருந்தே வேலை செய்தல்) ஆகிய விடயங்களில், ILO இன் ஆய்வு மற்றும் உலக வங்கியின் ஆய்வு ஒன்றுக்கொன்று ஒத்துவருகின்றன.
1988 அளவிலான காலத்தில், அரசாங்கம் அரச நிறுவனங்கள் தமது தொழில் வழங்கல் ஒதுக்கீட்டில் 3% ஐ மாற்றுத் திறனுடையோருக்கு ஒதுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. இன்னும், இச் சுற்றறிக்கையை அமுல்படுத்துவதில் இடைவெளிகள் காணப்படுகின்றன. மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சில தொழில்கொள்வோரே, தடைகளற்ற வேலைச்சூழலை வழங்குவதற்குரிய உட்கட்டமைப்பை வழங்க வேண்டும் என்ற விதிமுறையை அமுல்படுத்துகின்றனர். தொழில் கொள்வோரும் வேலைக்கு ஆட்களைச் சேர்ப்போரும் மாற்றுத் திறனுடையோரை உள்ளடக்கக்கூடிய வேலைத்தலங்களை உருவாக்குவது குறித்து இன்னும் தயாராகவில்லை.
இதனால், திறன் பெற்றவர்களாக மாற்றுதல், மீளவும் திறன் வழங்குதல், சான்றுப்படுத்துதல் என்பவற்றுக்கு மேலதிகமாக, பெண்களும் இளைஞரும் மாற்றுத் திறனுடைய ஆட்களும் தொழிற் சந்தையில் ஒன்றிணைக்கப்படுவதை சாத்தியமாக்கக் கூடிய சூழல், பாரம்பரியமாக பின்தள்ளப்பட்ட அக்குழுக்கள் தமது தெரிவுகளுக்கமைவாக தொழில் வாய்ப்பபை பெற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காகத் தேவைப்படுகிறது. இதனை சீர் செய்ய DWCP இன் கீழ் பின்வரும் தலையீடுகள் இருக்கும்:
வேலையற்ற அதேசமயம் தொழிற்படையிலும் இல்லா தோருக்கு, வேலையில் அவர்கள் ஈடுபட முன்னோடியாக ஊக்குவிப்பு நடவடிக்கைகளை செய்தல்.
தீர்மானங்களை எடுக்கும் பதவிகளில் பின்தங்கிய குழுக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காகப் பரிந்துரைத்தல்.
அரச துறையில் மாற்றுத் திறனுடையோருக்கான 3% ஒதுக்கீட்டை அமுல்படுத்தலானது பரிந்துரைக்கப்படுதல் என்பதுடன், அதனை அமுல்படுத்துவதற்hகன ஆலோசனைச் சேவைகள் பொது நிர்வாக அமைச்சுக்கு வழங்கப்படுதல்.
உட்கட்டமைப்பு விதிமுறைகள் முன்னரை விடவும் நன்றாக அமுல்படுத்தப்படுதலும், மாற்றுத் திறனுடையோருக்கான தடைகளற்ற சூழலை உருவாக்கும் தொழில்கொள்வோருக்கு சலுகைகள் கிடைக்கச்செய்தல்.
மாற்றுத் திறனுடையோருக்கான வேலை வழங்குதல் பற்றிய திருத்தப்பட்ட செயல்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான பரிந்துரைப்பு.
சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கண்ணியமான வேலை தொடர்பான இலங்கைக்கான செயற்திட்டம் 2018 - 2022 வரையான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.