கொவிட்-19: அரச - தனியார் துறை கூலிகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள்

கொவிட்-19: அரச - தனியார் துறை கூலிகளில் ஏற்படுத்தும் தாக்கங்கள்

கொவிட்-19 உலகப் பரவல் தொற்று நோயானது,  இலங்கையின் அரச மற்றும் தனியார் துறை செயற்பாடுகளில் பல்வேறு விதமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது.

இந்தத் தொற்று பரவலின் விளைவாக அரச துறை, முறைசார் தனியார் துறை, முறைசாரா தனியார் துறை ஆகியனவற்றில் கூலியில் கடந்த ஆண்டு எவ்வாறான தாக்கங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இலங்கை மத்திய வங்கியின் 2020 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
அது குறித்து நாம் கவனம் செலுத்துவோமாயின்,

CBSL_Salary.png

கூலிகள்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் பாதகமான தாக்கத்திற்கு மத்தியில் முறைசார் மற்றும் முறைசாரா தனியார் துறைகளிலுள்ள ஊழியர்களின் உண்மைக் கூலிகள் வீழ்ச்சியினைக் காண்பித்திருந்த அதேவேளை அரச துறை
ஊழியர்களினது உண்மைக் கூலிகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020இல் அதிகரிப்பொன்றை காட்டியிருந்தன.
இருப்பினும், கூலிகளின் ஊடாக பொது விலை மட்டத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட கேள்வித்தூண்டல் அழுத்தமானது ஆண்டு
காலப்பகுதியில் குறைவடைந்து காணப்பட்டது.

தனியார் துறைக் கூலிகள்

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலின் காரணமாக முறைசார் தனியார் துறை மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, தொழில் நடவடிக்கைகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மூலம் அவற்றின்
காசுப்பாய்ச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தமையினால் சில நிறுவனங்கள் சம்பளங்களை கீழ்நோக்கித் திருத்தம்செய்ய வேண்டியிருந்தது. மேலும், உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக வீட்டில் தங்குவதற்கு வேண்டப்பட்டிருந்த ஊழியர்களுக்கு இறுதியாகக் கொடுப்பனவு செய்யப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதத்தினை அல்லது ரூ.14,500 இவற்றில் எது ஊழியருக்கு அதிகம் சாதகமானதோ அதனைக் வழங்குவது தொடர்பில் திறன் அபிவிருத்தி, தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சு , இலங்கை ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் தொழிற் சங்கங்கள் என்பவற்றிற்கிடையில் முற்தரப்பு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

எனினும், சம்பளச் சபைகளினால் ஆளப்படுகின்ற ஊழியர்களின் குறைந்தபட்ச கூலி வீதச் சுட்டெண்ணின் (1978 திசெம்பர் 
= 100) ஆண்டுச் சராசரி மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முறைசார் தனியார் துறையிலுள்ள ஊழியர்களின்  பெயரளவிலான கூலிகள் 2019உடன் ஒப்பிடுகையில் 2020இல் 0.2 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இவ்வதிகரிப்பானது
கைத்தொழில் மற்றும் வணிகம் அத்துடன் பணிகள் துணை வகைகளிலுள்ள பணியாளர்களின் குறைந்தபட்ச கூலிகள்
என்பவற்றில் ஏற்பட்ட அதிகரிப்பின் மூலம் பிரதானமாகத் தூண்டப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும், முறைசார் தனியார்
துறையிலுள்ள ஊழியர்களின் உண்மைக் கூலிகள் 2019 உடன் ஒப்பிடுகையில் 2020இல் 4.2 சதவீதத்தினால்
வீழ்ச்சியடைந்திருந்தன.

கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றுப் பரவலினைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்ட கட்டுப்பாட்டு வழிமுறைகளுக்கு
மத்தியில் முறைசாரா தனியார் துறையினரின் உழைப்பிற்கான இயலளவின் மீது ஏற்பட்ட இடையூறுகளின் காரணமாக
கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய, முறைசாரா தனியார் துறை ஊழியர்களின் பெயரளவிலான கூலிகள்,
கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் முதலாவது அலையுடன் மே மாதத்தில் குறைவடைந்திருந்ததுடன் 2020
செத்தெம்பர் வரை படிப்படியாக மீட்சியடைந்திருந்தது. அதன் பின்னர், உலகளாவிய நோய்த்தொற்றின் இரண்டாம் அலையுடன் அது 2020 ஒத்தோபரில் மீண்டும் வீழ்ச்சியடைந்திருந்ததுடன் 2020 நவம்பர் மற்றும் திசெம்பர் மாதங்களில் மீட்சியடைந்திருந்தது.

ஒட்டுமொத்தமாக, முறைசாரா தனியார் துறைக் கூலி வீதச் சுட்டெண்ணின் ஆண்டுச் சராசரி மாற்றத்தினால் (2012 =100)
அளவிடப்பட்டவாறான முறைசாரா தனியார் துறை ஊழியர்களின் பெயரளவிலான கூலிகள் 2019உடன் ஒப்பிடுகையில் 2020இல் 3.3 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. அதேவேளை, முறைசாரா தனியார் துறையிலுள்ள ஊழியர்களின் உண்மைக் கூலிகள் 2019உடன் ஒப்பிடுகையில் 2020இல் 2.7 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது.

அரச துறைக் கூலிகள்

அரச துறைக் கூலி வீதச் சுட்டெண்ணின் ஆண்டுச் சராசரி மாற்றத்தினால் (2016 =100) அளவிடப்படுகின்றவாறான
அரச துறை ஊழியர்களின் பெயரளவுக் கூலிகள் 2019உடன் ஒப்பிடுகையில் 2020இல் 9.2 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.
இவ்வதிகரிப்பிற்கு 2019 யூலை 01இலிருந்து செயற்படும் வகையில் புதிய ஓய்வூதியத்திற்குட்படாத மாதாந்த இடைக்காலக் கொடுப்பனவான ரூ.2,500இனை அனைத்து அரச துறை ஊழியர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருந்தமை மற்றும் 2020 சனவரி 01ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அடிப்படைச் சம்பளத்திற்கு விசேட கொடுப்பனவினதும்
இடைக்காலக் கொடுப்பனவினதும் இறுதித் தொகுதியினைச் சேர்த்தமை என்பன காரணங்களாக அமைந்திருந்தன.
அதற்கமைய, அரச துறை ஊழியர்களின் உண்மைக் கூலிகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020இல் 2.9 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது என இலங்கை மத்திய வங்கியின் 2020ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image