தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடியால் துன்புறும் பெண்கள்!

தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடியால் துன்புறும் பெண்கள்!

தோட்ட நிர்வாகங்களின் கெடுபிடியால், பெண்கள் மிகவும் துன்பப்படுவதாக அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணியின்பொதுச்செயலாளர், சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தமது புதிய கட்சியின் நோக்கம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,

தொழிற்சங்க செயற்பாடுகளை சிலர் தங்களது வயிற்றுப்பிழைப்பு வியாபாரமாக்குவதையே நான் எதிர்க்கின்றேனே தவிர, தொழிற்சங்க செயற்பாட்டுக்கு நான் ஒருபோதும் எதிரியல்ல.தொழிற்சங்கம் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்படும் அமைப்பாகும். தொழிலாளர்கள் தங்களின் இரத்தம் சிந்தி வழங்கும் கோடிக்கணக்கான ரூபா சந்தா பணத்தில், மக்களுக்கு நேர்மையாக சேவை செய்திருந்தால், எமது சமூகம் வேறு மட்டத்திற்கு முன்னேறியிருக்கும்.

நியாயமான வேதன உயர்வு முக்கியமானதாகும். அதற்கு அப்பால், மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை, போதுமான மலசலக்கூட வசதிகள் இல்லை, தனிவீட்டுத் திட்டங்கள் குறைவு, கல்வி கற்க சரியான வசதி இல்லை, மருத்துவம் மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லை.

நிர்வாகங்களின் கெடுபிடியால், தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். கடந்த காலங்களில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு, பால்மா அல்லது போஷாக்கு உணவு போன்ற சலுகைகள் வழங்கப்படும்.

இவை அனைத்தும் தற்போது இல்லாதுள்ள நிலையில், இதற்காக எதுவுமே செய்யாமல், தேர்தல் காலங்களிலும், அங்கத்துவ படிவம் சேர்க்கும் காலங்களிலும், பணத்தைக்காட்டி, தம்மை வளர்த்துக்கொள்ளும் சில வியாபார தொழிற்சங்கங்களையே தான் எதிர்ப்பதாக அனுஷா சந்திரசேகரன் குறிப்பிட்டுள்ளார்.

தனது தந்தை அமரர் சந்திரசேகரன் ஆரம்பித்த தொழிற்சங்கத்தை தற்போது வியாபாரத்திற்காக தலைமைகள் பயன்படுத்துவதாக அனுஷா சந்திரசேகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

உங்களின் வியாபார நோக்கத்திற்காக இனியும் தனது தந்தையின் படத்தையோ அல்லது அவரின் பெயரை பயன்படுத்தி அங்கத்துவம் சேர்க்க வேண்டாம் என மலையக மக்கள் முன்னணிக்கும், மலையக தொழிலாளர் முன்னணிக்கும் வேண்டுகோள் விடுத்ததுடன், துணிவிருந்தால் உங்களின் படத்தை காட்சிப்படுத்தி, உங்களின் கொள்கைகளைக் கூறி மக்களை சந்தியுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், தொழிற்சங்கங்களின் ஊடாக பெண்களின் வாழ்க்கைக்கு நம்பிக்கையான வழிகளை தன்னால் நிச்சயமாக ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே தனது தந்தையின் வழியில் அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி என்ற புதிய தொழிற்சங்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts